×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் டெஸ்டில் முதல் முறையாக வென்று இந்தியா வரலாற்று சாதனை: ஹர்மன்பிரீத் & கோ அசத்தல்

மும்பை: மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியை முதல் முறையாக வீழ்த்தி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒரு டெஸ்ட் மற்றும் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டி வாங்கடே மைதானத்தில் கடந்த 21ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 219 ரன்னுக்கு சுருண்ட நிலையில், இந்தியா 406 ரன் குவித்து வலுவான முன்னிலை பெற்றது. மந்தனா 74, ரிச்சா 52, ஜெமிமா 73, தீப்தி 78, வஸ்த்ராகர் 47 ரன் விளாசினர்.

187 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன் எடுத்திருந்தது (90 ஓவர்). அனபெல் 12, கார்டனர் 7 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். கார்டனர் மேற்கொண்டு ரன் எடுக்காமல் வெளியேற, அனபெல் 27 ரன் எடுத்து ஸ்நேஹ் ராணா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் யஸ்டிகா பாட்டியா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த அலனா கிங் கோல்டன் டக் அவுட்டாக… கிம் கார்த் 4, ஜெஸ் ஜோனஸன் 9 ரன் எடுத்து ராஜேஷ்வரி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 261 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (105.4 ஓவர்). அந்த அணி 28 ரன்னுக்கு கடைசி 5 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சில் ஸ்நேஹ் ராணா 4, கேப்டன் ஹர்மன்பிரீத், ராஜேஷ்வரி தலா 2, பூஜா வஸ்த்ராகர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 75 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.ஷபாலி வர்மா 4 ரன், ரிச்சா கோஷ் 13 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். எனினும், இந்தியா 18.4 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன் எடுத்து ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரானடெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்தது. ஸ்மிரிதி மந்தனா 38 ரன் (61 பந்து, 6 பவுண்டரி), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் கார்த், கார்டனர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 3, 2வது இன்னிங்சில் 4 என மொத்தம் 7 விக்கெட் கைப்பற்றிய ஸ்நேஹ் ராணா சிறந்த வீராங்கனை விருது பெற்றார்.

11வது முயற்சியில்:
* இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளிடையே இதுவரை 11 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. முதல் 10 டெஸ்டில் ஆஸ்திரேலியா 4 வெற்றிகளைப் பதிவு செய்த நிலையில், 6 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தன. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையே வாங்கடே மைதானத்தில் நடந்த 11வது டெஸ்டில் இந்தியா முதல் முறையாக வெற்றியை வசப்படுத்தி அசத்தியுள்ளது.
* வாங்கடே மைதானத்தில் இந்திய மகளிர் அணி பெற்ற முதல் வெற்றியும் இது தான்.
* முதல் இன்னிங்சில் இந்தியா பெற்ற 187 ரன் முன்னிலை, ஆஸி. மகளிர் அணிக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிகபட்ச முன்னிலையாக அமைந்தது. முன்னதாக, 2005ல் வொர்செஸ்டரில் ஆஸி.க்கு எதிராக நடந்த டெஸ்டில் இங்கிலாந்து 158 ரன் முன்னிலை பெற்றதே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை இந்திய மகளிர் அணி முறியடித்துள்ளது.

The post ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் டெஸ்டில் முதல் முறையாக வென்று இந்தியா வரலாற்று சாதனை: ஹர்மன்பிரீத் & கோ அசத்தல் appeared first on Dinakaran.

Tags : India ,Women's Test ,Australia ,Harmanpreet & Co ,Mumbai ,Harmanpreet ,
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...